வீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த பெடரர்!

ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவல் பொருளாதாரத்தை மட்டுமல்ல, விளையாட்டுத் துறையையும் மோசமாக பாதித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள், ஐ.பி.எல்., பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் போட்டிகள் உட்பட ஏராளமான முக்கிய விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்கள் பலரும் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். பொழுதை கழிக்க சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குகின்றனர். சுவிஸ் டென்னிஸ் நட்சத்திரமான ரோஜர் பெடர், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். அவ்வப்போது சமூக ஊடகங்களில், அவரது ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில், வீட்டிலிருந்தே பயிற்சி என்ற பெயரில், டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஒரு நிமிட வீடியோவில், டென்னிஸ் பந்தை சுவற்றில் அடித்து 'சோலோ டிரில்' செய்கிறார். இந்த வீடியோவை 17 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ரசிகர்களையும் பதிலுக்கு வீடியோ பதிவிடும் படி கேட்டுக்கொண்டார். அடுத்த பதிவில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி, கால்பந்தாட்ட வீரர்களான டோனி க்ரூஸ், ரொனால்டோ மற்றும் பில்கேட்ஸ், பியர் கிரில்ஸ் உள்ளிட்டவர்களை குறிப்பிட்டு, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.